சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, அகவிலைப்படி 42% இருந்து 46% ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18ந்தேதி (October 18,2023) மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என சுமார் 1கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. . இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதன் முன்பு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1முதல் அமல்படுத்தப் பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.