சென்னை:
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறு தினம் நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளில் 19-ந்தேதி வரை பிரசாரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் உள்பட 97 லோக்சபா தொகுதிகள், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அதேவேளையில், விடுபட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் 4 தொகுதி களுக்கும் மே 19ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகளில் ஆகிய அங்கு பிரசாரம் செய்யலாமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளிலும் நடைபெற உள்ளதால் தேர்தல் விதிப்படி இன்று மாலை 6 மணியுடன் இங்கு பிரசாரம் முடிகிறது.
எனவே இடைத்தேர்தலை காரணம் காட்டி இங்கு பிரசாரம் செய்ய முடியாது. 4 சட்டசபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியில் இருந்து வருகிற 19-ந்தேதி வரை பிரசாரம் செய்யக் கூடாது. அதன்பிறகு இந்த 4 தொகுதிகளிலும் தொடர்ந்து பிரசாரம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.