கோவை: கோவையில் நீதிமன்ற வாய்தாவுக்கு வந்தவர்கள்மீது  நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவர் மீது உள்ள  வழக்கு விசார ணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு  வருகை தந்தனர்..  அவர்கள் இருவரும்  நீதிமன்றம் அருகே உள்ள தேநீர் கடையில் இருவரும் தேநீர் குடிக்க சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடை முன்பாக அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல்  என்பவர் நீதிமன்ற வாசலிலேயே உயிரிழந்தார். கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து,  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த கோகுலின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த பட்டாக் கத்தி, அரிவாளை காவல் துறையினர் மீட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு மீதும், காவல்துறையினர்மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆய்வு நடத்திய கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி ருவதபாக கூறினார்.

இதைத்தொடர்ந்து கோவை மட்டுமின்றி அருகே உள்ள நகரங்களிலும், சாலைகளிலும் கடும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நீலகிரி மாவட்ட எஸ்.பி.பிரபாகரன் உத்தரவில் குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் போலீஸ் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், நடைபெற்ற வாகன சோதனையின்போது, காரில் வந்த கொலையாளிகள்  நான்கு பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.