சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது இந்த கொலை வழக்கில்  நடைபெற்ற காவல்துறையினரின் 3வது என்கவுண்டராகும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளை கருதப்படும் சீசிங் ராஜா உள்பட சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி சீசிங் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில்  சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை போலீசார் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், அவர் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டார். அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்ற காவல்துறையினர் அவரை அழைத்துச்சென்றபோது, அவர் ஆயுதங்களை கொண்டு, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதை தடுக்கும் வகையில், போலீசார் தற்காப்புக்காக அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் எப்போதும்போல காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த என்கவுண்டரின்போது,   சீசிங் ராஜா மீது இரண்டு குண்டுங்கள் பாய்ந்த நிலையில், அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி அவரை போலீசார் தேடி வந்தனர். செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சீசிங் ராஜா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படத்துடன் கூடிய பொது அறிவிப்பு போஸ்டர்கள் தாம்பரம் மாநகர காவல் சார்பில் சேலையூர், தாம்பரம் உட்பட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை மாறி, மாறி காவலில் எடுத்து செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டும் அல்லாது, கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஆஜராகாத சீசிங் ராஜாவை தீவிரமாக தேடி வருவதாகசவம்

இந்த நிலையில் நேற்று (செப் 22) காலை ஆந்திர மாநிலம், கடப்பாவில் பதுங்கி இருந்த சீசிங் ராஜாவை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியது. கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று சீசிங் ராஜா கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

சீசிங் ராஜாவிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள அக்கறை கெனல் கிராஸ் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார் என கூறப்படுகிறது.

இதனை அடுத்து, மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய சீசீங் ராஜாவை போலீசார் அழைத்து சென்றதாகவும், அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து போலீசாரை வெட்ட சீசிங்கு ராஜா முயற்சி செய்ததாகவும் இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் அப்போது சம்பவ இடத்திலேயே ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ரவுடி சீசிங் ராஜாவின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக் காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு, சென்னை போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட  திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து, மற்றொரு ரவுடியும் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது 3வது நபராக சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகர ஆணையராக அருண் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் 3-வது என் கவுண்டர் இதுவாகும். அதே வேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்படும் முக்கிய குற்றவாளிகள் உடனுக்குடன் என்கவுண்டர் செய்யப்படுவதும், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற என்கவுண்டர்கள் உண்மை குற்றவாளிகைள கண்டுபிடிப்பதற்கு பதில் வழக்கின் போக்கை திசை திருப்பி விடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.