லண்டன்:கண்டெய்னர் லாரியில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் உள்ள பூங்காவுக்கு, கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. சந்தேகப்படும்படியான அந்த லாரியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
அப்போது லாரிக்குள் ஏராளமான சடலங்கள் இருப்பது கண்டு அதிர்ந்து போயினர். சிறுவன் உள்பட மொத்தம் 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றினர். பின்னர் அவை அனைத்தும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில் கண்டெய்னர் லாரியில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த தகவல்களை பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன.
ஆனால் உள்ளூர் போலீசாரும், சீன தூதரக அதிகாரிகளும் இந்த தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டதோடு, எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.