நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள தளர்வுகளே காரணம் என்றும், மக்களின் மெத்தனம் என்றும் காரணம் கூறப்படுகிறது. கடந்த மாதம், புதுச்சேரி சட்டபேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், கூட்டத்தொடர் அவசரம் அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதையடுத்து சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அமைச்சர் கமலக்கண்ணனுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்றுமுதல் மாநிலத்தில் பள்ளிகளும் திறக்கப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், பெற்றோர்கள் அனுமதி கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில், தொடங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் உதவியாளர் பிரதீசுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,539ஆக உயர்ந்துள்ளது.