புதுடெல்லி: கடந்த 38 ஆண்டுகளாக இழுவையாக நீடித்துவந்த மஞ்சள் மோசடி தொடர்பான ஒரு வழக்கு, ஒருவழியாக முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை, இந்தியா வணிகம் செய்வதற்கு உகந்த தேசமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு, மஞ்சள் மோசடியில் ஈடுபட்டார் என்று ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு குறித்து விசாரித்த 2 கீழமை நீதிமன்றங்கள் தலா 14 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு, கடைசியாக அந்த நபருக்கு, 1 மாத சிறைதண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இறுதியில், மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் சென்ற அந்த வழக்கில், 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது. ஆகமொத்தம், ஒரு வழக்கிற்கு தீர்வு காண்பதற்கு, இந்திய நீதிமன்றங்களுக்கு 38 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.
வணிகம் செய்வதற்கு, உலகின் மூன்றாவது உகந்த இடம் என்று உலக வங்கியால் இந்தியா பட்டியலிடப்படுகிறது. ஆனால், ஒப்பந்தங்களை அமல்செய்தல் என்று வருகையில், பாகிஸ்தான், செனகல் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிக்கல்வாய்ந்த நிலை, தேவையற்ற தாமதங்கள் போன்றவை, நீதிபரிபாலனத்தில், இந்தியா எந்தளவிற்கு பின்தங்கியுள்ளது மற்றும் இன்னும் எந்தளவிற்கு முன்னேற வேண்டியுள்ளது என்பதைக் காட்டுவதாக வர்த்தக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்திய நிறுவனங்கள், நீதிபரிபாலனத்திற்கு, எந்தளவிற்கு அதிகம் செலவுசெய்ய வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலை, இந்தியா, வணிகம் செய்வதற்கு உகந்தா இடமா? என்ற கேள்வியை வலுவாக எழுப்புவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.