சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அதிமுகவினர்9 எம்ஜிஆர் படத்தை அலங்கரித்து, மலர்தூவி மரியாதை செய்து வருகின்றனர். சில பகுதிகளில், உணவுகளும், நலத்திட்டஉதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் 37வது நினைவுநாளையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு இன்று காலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று, மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி, எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தியில், நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமாம் அதிமுக, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம்! என குறிப்பிட்டுள்ளார்.