தவோ,
பிலிப்பைன்ஸ் நாட்டில் தவோ நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 1,514 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள மிகப்பெரிய நகரம் தவோ. அந்த நகரின் மையப்பகுதியில் 4 மாடிகளைக் கொண்ட நியூ சிட்டி கமர்சியல் சென்டர் என்ற வணிக வளாகம் உள்ளது.
இந்த வளாகத்தின் 3-வது தளத்தில் துணிக்கடைகள், பர்னிச்சர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைந்து உள்ளன. இந்த வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் தீப்பிடித்தது.
இதனால் பதறிப்போன வாடிக்கையாளர்கள் அலறியடித்தபடி வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில் அந்த வளாகத்தின் 4-வது தளத்தில் இயங்கி வந்த கால்சென்டரில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாக நெருங்க முடியவில்லை.
இந்த பயங்கர தீ விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் கரிக்கட்டைகளாகி இருப்பதாகவும், ஒருவரது உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கர தீ விபத்தில் இருந்து 231 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.