சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 37 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு இடத்தை பிடிக்க பலர் போட்டியில் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் இருந்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 31ல் பொறுப்பேற்றார். அவரது பதவி காலம் வரும் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய துணைவேந்தர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முன்னதாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூர்ணலிங்கம் நியமிக்கப்பட்டார். மேலும், மைசூர் ஜெ.எஸ்.எஸ்., உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைவேந்தர் சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சை துறை இயக்குனர் தணிகாசலம் உள்பட பலர் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், துணைவேந்தர் பதவிக்கு இதுவரை 37 பேர் விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளின் டீன்கள், துறைத் தலைவர்கள் என பலர் கோதாவில் குதித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து வரும் குழுவினர், அதில் தகுதியான சிலரை தேர்வு செய்து, ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பார்கள். அவர்களில் ஒருவரை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவி நியமிப்பார். இன்னும் 10 நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.