டில்லி:

பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய எம்.பி.க்கள் குடியேற வசதியாக 4 பெட்ரூம் வசதியுடன் 36 புதிய குடியிருப்புகள் டில்லியில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் விரைவில் எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் டில்லில் தங்குவதற்கு வசதியாக ஏற்கனவே பல குடியிருப்புகள் உள்ளன. ஆனால்,  அங்கு தங்கியிருக்கும் எம்.பி.க்கள் தங்களது பணிக்காலம் முடிந்து, வேளியேற மறுத்து வருகின்றனர். பலர் தங்களது குடியிருப்பை காலி செய்வதற்கு அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பி.க்கள் தங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. குடியிருப்பு வசதி இல்லாத எம்.பி.க்கள் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மத்தியஅரசின் செலவில்  தங்க வைக்கப்படுகின்றனர்.

இந்த செலவை தவிர்க்கும் பொருட்டு, பாஜ தலைமையிலான அரசு  புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து பழைய குடியிருப்புகள் அகற்றப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் புதிய  குடியிருப்புக்கள் கட்டும் பணி தொடங்கியது.

தற்போது இந்த 36 அடுக்குமாடி குடியிருப்புகளும் குடியேற வசதியாக தயார் நிலையில் உள்ள. ஒவ்வொரு குடியிருப்பும் லிப்ட் வசதி உடன், அலுவலக அறை, மற்றும் மாடுலார் கிச்சன் மற்றும் 4 படுக்கையறைகள்,  இரண்டு கார் பார்க்கிங் பகுதி  என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகள் அனைத்தும் மக்களவை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு தேவையான எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.