தைவான் தலைநகர் தைப்பே-யிலிருந்து 350 கி.மீ. க்கு அப்பால் உள்ள தைடுங் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 36 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில், 70 க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 60 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புனித வெள்ளி, ஈஸ்டர், வார இறுதி நாட்கள் என்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், 350 க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற இந்த ரயில் தைப்பே-யிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள டொரோகோ கோர்ஜ் அருகே மலைப்பாதையில் உள்ள சுரங்கபாதையில் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

மலைப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனம் நிலச்சரிவில் ரயில் பாதையில் விழுந்ததால், அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, விபத்து குறித்து தைவான் அரசு விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளது.