சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணி புரிவதாகவும், இது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளனர்.
அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது. அப்படி பணிபுரிந்தால் மோசடி என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் கூறுகிறது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும்.
ஆனால், இவர்கள் எப்படி ஒரே நேரத்தில் 224 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது விந்தையாகவே உள்ளது.
கடந்த 2023-24 கல்வி ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விவரங்களை ஆய்வு செய்ததில், 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம். அவர்களில் 175 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது
இதுதொடர்பாக 2023-24ல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய இணைப்பு அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர் இளையபெருமாள், ஆய்வுக் கமிட்டியின் உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயலர் லட்சுமிநாராயண் மிஸ்ரா, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரே வாரத்தில் மீண்டும் ஆய்வு செய்து தரமான கல்லூரிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கூறினார்.
அறப்போர் பத்திரிக்கை செய்தி
நூற்றுகணக்கான கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தில் மாபெரும் மோசடி
அண்ணா பல்கலைக் கழகத்தின் CAI (Affiliation பிரிவு – Inspection Committee), கடந்த 2023-24 கல்வியாண்டில் தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து மோசடி செய்துள்ளனர். 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்களாக வேலை செய்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகரித்து மோசடி செய்துள்ளது.. இது போன்று 972 முழுநேர பேராசியர் இடங்கள் மோசடியாக நிரப்பியதை அங்கீகரித்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரே முழு நேர பேராசிரியர் பல கல்லூரிகளில் இருப்பது மொத்தமாக 224 கல்லூரிகளில் நடந்துள்ளது. எனவே அந்த 2023-24இல் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட அப்போதைய CAI இயக்குநர் திரு.A.இளையபெருமாள், Inspection Committee உறுப்பினர்கள், 224 கல்லூரி நிர்வாகிகள், 353 பேராசிரியர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் இன்றைய தினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், ஆளுநர் திரு R.N.ரவி அவர்களுக்கும், தலைமைச்செயலர் திரு.சிவதாஸ் மீனா அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களுக்கும், உயர்கல்வித்துறை செயலர் திரு.பிரதீப் யாதவ் IAS அவர்களுக்கும் புகார் அனுப்பியுள்ளது.
இது போன்ற மோசடி தொடராமல் இருக்க, 2023-24 Inspection மேற்கொண்ட அந்த குழுவினர் விசாரிக்கபடவேண்டும், செய்த மோசடிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு Dr.R.வேல்ராஜ் அவர்களுக்கும், Syndicate Member திரு I பரந்தாமன் அவர்களுக்கும் மனு அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான அவர்களுக்கும், மற்றும் செயலர் திரு லட்சுமிநாராயண் மிஸ்ரா IAS மற்றும் AICTE – Chairman திரு.T.G சீதாராம் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
மோசடி விவரம் :
அண்ணா பல்கலைக்கழகம் (CAI பிரிவு – Inspection Committee) ஆண்டு தோறும், தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வில் கல்லூரிகளின் பேராசியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித்தகுதி மற்றும் மாணவர்களுக்கான செய்முறை பரிசோதனை கூடம் போன்றவற்றின் உட்கட்டமைப்பு பொறுத்தே அந்தந்த கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.
ஒவ்வொரு படிப்புக்கும் கல்லூரியில் இருக்க வேண்டிய கட்டமைப்பை AICTE (All India Council for Technical Education) வகுத்துள்ளது, அந்த விதிமுறைகளை கொண்டே அண்ணா பல்கலைக்கழகம் நேரடி ஆய்வு மேற்கொள்கிறது. அந்த கட்டமைப்பு பொறுத்தே கல்லூரிகளில், பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படும்.
ஒரு கல்லூரியின் முழுநேர பேராசிரியர், ஒரே நேரத்தில் மற்றொரு கல்லூரியில் முழுநேர பேராசியராக பணிபுரிய முடியாது, அப்படி பணி புரிந்தால் மோசடி என்று AICTE கூறுகிறது. சிறப்பு பேராசிரியர்கள் (Guest Lecture) முழுநேர பேராசிரியர்கள் அல்ல. ஒரு கல்லூரியில் பணிபுரியும் முழுநேர பேராசிரியர் மற்றும் முனைவர்கள் (Phd) எண்ணிக்கை பொறுத்தே அந்த கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும், அந்த பாடபிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படும். இதை உறுதி செய்யவே அண்ணா பல்கலை கழகம் (CAI பிரிவு – Inspection Committee) ஆண்டு தோறும், தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளை நேரடி ஆய்வு செய்கிறது.
அ) போலியான முழுநேர பேராசிரியர்கள் :
2023-24இல் அங்கீகரிப்பட்ட கல்லூரிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர் விபரங்களை அண்ணா பல்கலை கழகத்தின் இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்து ஆய்வு மேற்கொண்டத்தில் 353 பேராசியர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசியராக உள்ளனர் என்ற தரவை அறிய முடிந்தது. (இணைப்பு 1)
அந்த தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சம்,
- DR. S. MARICHAMY – 03/06/80 மற்றும் DR. K. MURALIBABU – 05/06/80 ஆகிய இரு பேராசிரியர்கள் தலா 11 கல்லூரியில், நேரடியாக ஒரே நேரத்தில், வேறு வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர் என்பது அதிர்ச்சியான செய்தி . (இணைப்பு 2)
- DR. S. VENKATESAN – 21/01/76, MR. M. ARANGARAJAN – 07/06/81 மற்றும் DR. S. VASANTHA SWAMINATHAN – 10/07/81 ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் தலா 10 கல்லூரியில், நேரடியாக வேறு வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர்.
இது போன்று 353 முழுநேர பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணி புரிகின்றனர். அப்படி பொய்யாக நிரப்பப்பட்ட முழுநேர பேராசிரியர்கள் பணி இடத்தின் எண்ணிக்கை 972. இந்த போலி பேராசிரியர்கள் 224 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக பணி புரிகின்றனர்,
இதை மறைத்து அண்ணா பல்கலை கழகத்தின் Inspection Committee அங்கீகாரம் வழங்கியுள்ளது. கீழே சில உதாரணங்கள்:
(Download the Complaint for Full List.)
ஆ) அண்ணா பல்கலை கழகமும் (Inspection Committee), கல்லூரி நிர்வாகமும் கூட்டுச்சதி:
அண்ணா பல்கலைக்கழகத்தின் குழு 2023-24இல் கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வுக்கு சென்ற தேதி விபரங்களை RTI மூலம் பெற்றோம்,(இணைப்பு 4)
- 02.06.2023 அன்று ஒரே நாளில், Sree Sastha Institute of Engineering and Technology,Chembarambakkam மற்றும் Sree Krishna College of Engineering,Vellore ஆகிய இரு கல்லூரிகளுக்கு ஆய்வு குழு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரு கல்லூரிகளில் Mr.R. RAMKUMAR (DOB : 10-05-1992) என்ற பேராசிரியர் முழுநேர பேராசிரியராக மாணவர்களுக்கு உள்ளதாக அந்த கல்லூரி தெரிவித்துள்ளதை இரு கல்லூரிகளுக்கும் சென்ற ஆய்வுக்குழு எப்படி ஒப்புக்கொண்டனர் ??
- 26.05.2023 அன்று ஒரே நாளில், PPG Institute of Technology, Coimbatore மற்றும் Mohamed Sathak Engineering College,Ramanathapuram ஆகிய இரு கல்லூரிகளுக்கு ஆய்வு குழு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரு கல்லூரிகளில் DR. R. BABU (08-06-1979) என்ற பேராசிரியர் முழுநேர பேராசிரியராக மாணவர்களுக்கு உள்ளதாக அந்த கல்லூரி தெரிவித்துள்ளதை இரு கல்லூரிகளுக்கும் சென்ற ஆய்வுக்குழு எப்படி ஒப்புக்கொண்டனர்??
மேலும் இது போன்று ஒரே நாளில் ஆய்வுக்குழு சென்ற பொழுது ஒரே நபர் 2 கல்லூர்கிளில் முழுநேர பேராசிரியர்களாக வேலை செய்ததாக ஆய்வு குழு அங்கீகரித்த பட்டியல் இணைப்பு 5 இல்.
(Download the Complaint for Full List.)
இ) மற்ற கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் எத்தனை பேர் ஒவ்வொரு கல்லூரிகளிலும் உள்ளனர் ?? (5 ற்கும் மேற்பட்டவர் கீழே )
(Download the Complaint for Full List.)
உதாரணத்திற்கு, Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology-Chengalpattu முழுநேர பேராசிரியராக பணிபுரிபவர்கள் அதே நேரத்தில் வேறு கல்லூரியிலும் முழுநேர பேராசிரியராக இருகின்றனர், தற்போதும் இந்த விபரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்க இயலும்
(Download the Complaint for Full List.)
ஈ) Unique Id இல்லாத பேராசிரியர்கள்:
ஒவ்வொரு பேராசிரியருக்கும் AICTE இணையத்தில் Unique Id கல்லூரி உள்ளீடு செய்யும் வழிமுறை உள்ளது, வேற எங்கேனும் பணியில் இருந்ததால் அந்த கல்லூரி பேராசிரியர் பட்டியலில் இணைக்க முடியாது, ஆனால் முறையான, AICTE வழங்கிய Unique IDஐ Entry செய்யாமல், போலித்தனமாக AU, AUU, AU1, Number1, AU1000 போன்று போலியான ID வழங்கி முழுநேர பேராசியராக இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 13,891 பேர். இவர்கள் அங்கு உறுதியாக பணியில் இருக்கிறார்களா?, மேலே உள்ள பேராசிரியர்களும் தங்களின் தனிப்பட்ட ID வழங்காமல் போலியான IDகளை வழங்கியுள்ளனர். மேலும் அப்படி தனிப்பட்ட ID வழங்காதவர்கள் தகுதியான பேராசியரா என்பதும் சந்தேகமே.! எனவே முழுநேர பேராசிரியர்களுக்கு உரிய தனிபட்ட ID தரவுகள் வழங்கபடாமல் பணிபுரிவதாக சொல்லப்படும் 13,891 பேராசிரியராக பணிபுரிவதை ஆய்வு செய்து தகுதியான பேராசிரியர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த முறைகேடுகள் மீது உடனடியாக கிரிமினல் மற்றும் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இந்த ஆண்டு முதல் இது போன்று நடைபெறாமல் மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.