புதுடெல்லி: தங்களின் வருமான வரி கணக்கு விபரங்களுடன், சுங்கவரி தொடர்பான பதிவுகள் முரண்படக்கூடிய 3500 ஏற்றுமதியாளர்களிடம் அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுதவிர, ஜிஎஸ்டி தாக்கல் கணக்குகளில் முரண்பாடுகளைக் கொண்டுள்ள 3% வணிகர்களின் மீதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், முறைகேடுகேளில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையிலான வழிமுறைகளையும் வழங்கியுள்ளது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம். இதன்மூலம், நேர்மையானவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஏற்றுமதி பொருளையும் பிரித்துப் பார்ப்பதோ அல்லது மீள்செலுத்தல் தொகையை நிறுத்துவதோ எங்களின் வேலை அல்ல. ஆனால், தங்களின் பொறுப்பை உணராமல், மோசடியில் ஈடுபடுவோரிடம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று துறைசார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், முறையான வரவு-செலவு கணக்குகளை வைத்திருப்போர் எந்த அச்சமும் கொள்ள வேண்டியதில்லை. நாட்டில் மொத்தமாக, 12 லட்சம் பேர் ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்வோராக பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.5 லட்சம் பேர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.