போபாலின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக நேற்று அகற்றப்பட்டது.

இந்த நச்சுக் கழிவுகளால் யூனியன் கார்பைடு வளாகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 42 குடியிருப்புகளின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சட்ட போராட்டம் இதனால் முடிவுக்கு வந்தது.

இந்த நச்சுக் கழிவுகளை ஜனவரி 6ஆம் தேதிக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது. 4 நாட்களில் 337 மெட்ரிக் டன் குப்பை பைகளில் அடைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் லாரிகளில் ஏற்றத் தொடங்கியது. புதன்கிழமை பிற்பகலில் செயல்முறை முடிக்கப்பட்டு இரவில் பிதாம்பூருக்கு அனுப்பப்பட்டது.

போபாலில் இருந்து 12 லாரிகள் மூலம் நேற்று இரவு 9:05 மணிக்கு பிதாம்பூருக்கு அணிவகுத்த இந்த கண்டெய்னர் லாரிகளுக்கு முன்னால் 5 போலீஸ் வாகனங்கள் சென்றன.

100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போபாலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூர் செல்லும் வழியில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அஷ்டா சுங்கச் சாவடி அருகே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் மெதுவாகவே இயக்கப்பட்டதாகவும் மணிக்கு 40 – 50 கி.மீ. வேகத்திலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாகனங்கள் இன்று காலை பிதாம்பூரில் இந்த நச்சுக் கழிவுகளை இறக்கி அதை உரிய முறையில் அழிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள உள்ளது.