உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் 32 சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் 54 சதவீதத்துக்கும் அதிகமானோர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research – NCAER) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது உணவு விநியோகப் பிரிவில் படிப்பிற்கும் திறமைக்கும் பொருத்தமில்லாத மிகப்பெரிய திறன் பொருத்தமின்மையை சுட்டிக்காட்டுகிறது.
28 நகரங்களில் ஒரு குறிப்பிட்ட உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரியும் 924 பணியாளர்களிடம் NCAER நடத்திய கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்த உணவு விநியோக தொழிலாளர்களின் சராசரி வயது 29.
இதில் 31.6 சதவீதம் பேர் திடீர் வேலையிழப்பு மற்றும் வேலையில்லா காரணத்தால் உணவு டெலிவரி வேலைக்கு வந்ததாகவும் சராசரியாக 5 முதல் 6 மாதம் வேலையில்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களே இந்த உணவு விநியோக தொழிலில் அதிகம் வேலை செய்கிறார்கள். இவர்கள் இதே வயதில் உள்ள தங்கள் நண்பர்களை விட 23 சதவீதம் அதிக வேலை செய்கிறார்கள் என்றபோதும் அவர்களை விட 8 சதவீதம் குறைவாக சம்பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.