புதுச்சேரி: நிவர் புயல் உருவாக்கம் காரணமாக, கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரைதிரும்ப அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இதுவரை திரும்பாதது அவர்களது குடும்பத்தினரை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளத. மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட கடலோர காவல்படையை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்ட நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நேற்று நள்ளிரவி புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. அப்போது, கரைக்காலில் மணிக்கு 120 முதல் 140 கிமீ வரை பலத்த காற்றும், மழையும் பெய்தது. நிவர் புயலை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடந்த இரு நாட்களாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதே போல கடலுக்குள் சென்ற மீனவர்களும் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டத் சேர்ந்த 192 மீன்பிடி விசை படகுகளில் 102 படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துவிட்டதாகவும், மேலும், 67 மீன் பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்து இருப்பதாகவும், இதுவரை 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்பாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில், 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர்களது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை தேடும் பணிக்கு கடலோர காவல்படையின் உதவியை நாட்டி உள்ளதாக கூறப்படுகிறது.