மும்பை:

கோரிக்கைகளை வலியுறுத்தி 30 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்ட பேரணி மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

விளை பொருட்களுக்கு உரிய விலை வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மகாராஷ்டிரா அரசு உறுதி அளித்தது. ஆனால், கோரிக்கைகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் நோக்கி அகில இந்திய கிஸான் சபா தலைமையில் 30 ஆயிரம் விவாயிகள் பேரணியாக புறப்பட்டுள்ளனர். நாளை காலை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அகில இந்திய கிஸான் சபாவின் மாநில பொதுச் செயலாளர் அஜித் நவாலே கூறுகையில், ‘‘கடன் தள்ளுபடி, உரிய விலை போன்றவற்றை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததற்கு மாநில அரசு பதில் கூற வேண்டும். இவை அனைத்தும் அரசு உறுதி அளித்த கோரிக்கைகள் தான்.

பயிர் பாதிப்பு காரணமாக விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவர்கள் வேறு வழியின்றி தங்களது கோரிக்கை வெளிப்படுத்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்’’ என்றார்.

இந்த போராட்டத்துக்கு எதிர்கட்சியான காங்கிரஸ், பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. 180 கி.மீ.தொலைவு கொண்ட இந்த பேரணி 12 ஆயிரம் விவசாயிகளுடன் தொடங்கியது. பின்னர் இந்த எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்தது. மேலும் பலர் இதில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் இதன் எண்ணிக்கை 55 ஆயிரம் முதல் 60 ஆயிரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் பேரணி விக்ரோலியை அடையும் போது விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நட்ட அமைச்சர் கிரிஷ் மகாஜனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அனுப்பிவைத்துள்ளார்.

ஆலங்கட்டி மழை மற்றும் இளம் சிகப்பு நிற பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வன நிலங்களில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.