சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 30% பாதிப்புகள், குடும்ப தொடர்புகளாலேயே பரவுகிறது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மேலும் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இதுவரை 28,14,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், இன்று மேலும், 6,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,98,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் 30 சதவிகித கொரோனா பரவல், அவர்களின் குடும்பத்தினர் மூலமே பரவி வருவதாக சென்னை மாநகராட்சி தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 8ந்தேதி வரையிலான தரவுகளின் அடிப்படையில், சென்னையில் கொரோனா தொற்று உறுதியான 5,040 பேரில் 1,502 பேர் குடும்பத் தொடர்புகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் வீட்டைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மக்கள் நெருக்கமான பகுதியான வட சென்னை மற்றும், சிறிய வீடுகளைக் கொண்ட பகுதிகளிலேயே நோய் தொற்று அதிக அளவில் புதிய நோய்த்தொற்றுகளை உருவாக்கியுள்ளன.
வடசென்னையின் மாதவரம் மண்டலத்தில், 60% வழக்குகள் வீட்டுத் தொடர்புகளாகவும், திரு வி க நகர் மண்டலத்தில் 49% ஆகவும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 43% ஆகவும் பதிவாகியுள்ளன. அண்ணாநகர் மண்டலத்தில் 12%, தேனாம்பேட்டையில் 25% மற்றும் அடையாரில் 15% வழக்குகள் மட்டுமே குடும்பத் தொடர்புகளாக உள்ளன.
பொதுவாக வீடுகள் பெரியதாக இருக்கும் அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் அடையார் ஆகிய இடங்களில் இதுபோன்ற வழக்குகள் குறைவாகவே இருப்பதும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கார்ப்பரேஷன் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வீடுகளில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த குடிமை மாநகராட்சியால் ஏதும் செய்ய முடியாது. ஆனால், வீட்டில் முகமூடி அணிந்தால் மட்டுமே பரவலைக் குறைக்க முடியும்”. அதே வேளையில், பொதுஇடங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
“முந்தைய கோவிட் அலைகளின் போது கூட வீடுகளுக்குள் பரவல் காணப்பட்டது, ஆனால் இந்த முறை அது வேகமாக உள்ளது. இது தவிர, அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.