கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், நாங்கள் 30%முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்களை உருவாக்குவோம் என்று அதிரடியாக பேசியுள்ளார். இது இந்தியாவில் பிரிவினையை தூண்டுவதாக அமைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், சர்ச்சையாகி உள்ளது.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலையொட்டி, அங்கு தேர்தல் களம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திரிணலாமுல் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் காரணமாக, பல இடங்களில் மோதல்களும் நடைபெற்று வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜியும், இதுவரை இல்லாத முறையில், தனக்கு ஏற்பட்ட விபத்தை, அரசியலாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அங்கு கட்சி பாகுபாடின்றி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிரடியாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அது அங்குள்ள மக்களிடையே பிளவை உருவாக்கும் வகையில் அமைந்து வருகிறது.
இந்த நிலையில், ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர், தேர்தல் பரப்புரையின்போது, நாட்டின் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் பசா பரா நானூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் ஆலம், “நாம் 30% முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான்கள் உருவாக்க முடியும், மக்கள் தொகையில் நாம் 30%, அவர்கள் 70% உள்ளனர். 70% மக்களின் ஆதரவுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டும். நம்முடைய முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டால், அந்த 70% பேர் எங்கே செல்வார்கள்?”
என பேசியுள்ளார். ஷேக் ஆலம் பேச்சு, மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக தலைவர் அமித் மால்வியா, “ மம்தா பானர்ஜி ஷேக் ஆலமின் இந்த நிலைப்பாட்டை ஒப்புக்கொள்கிறாரா? அது போன்ற ஒரு வங்காளம் நமக்கு வேண்டுமா?” என பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சர்ச்சையான பிறகு, இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஷேக் ஆலம், நான் ஒருபோதும் பாகிஸ்தானை கட்டமைக்க வேண்டும் என விரும்ப வில்லை. நான் சொன்னது எல்லாம் அவர்கள் எங்களை முஸ்லிம்களை அச்சுறுத்தினால், நாமும் சக்திவாய்ந்தவர்கள் என்பது மட்டுமே. என்னுடைய பேச்சு திரித்துக் கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்குவங்க மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 27% மாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஆலம் பேச்சு – வீடியோ