சேலம்:

மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 குழந்தைகள்  விற்பனை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டு உள்ளனர்.

சமீபத்தில் சேலம் பகுதியில் வெளியான ஆடியோ ஒன்றில் பேசிய பெண் ஒருவர், குழந்தை களுக்கு விலைபேசி விற்பனை செய்வது வெட்ட வெளிச்சமானது.  அதையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையில்,  நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளம் குழந்தை களை பேரம் பேசி விற்பனை செய்து வந்த விவகாரம் தெரிய வந்தது. இது தொடர்பாக   விருப்ப ஓய்வு பெற்ற  நர்ஸ் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன்  முதலில் கைது செய்யப்பட்ட நிலை யில், ஈரோட்டில் பணிபுரியும் தனியார் மருத்துவமனை செவிலியரான பர்வீனுக்கு கொல்லிமலை யில் பணிபுரியும் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனரான முருகேசனும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பான விசாரணை விரிவடைந்து வருவதால்,  வழக்கை தமிழகஅரசு சிபிசிஐடிக்கு மாற்றியது. மேலும் தமிழக சுகாதாரத்துறையும் குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவினர், கொல்லிமலை உள்பட கிராமப்புற  பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் விவரங்களும், அக்குழந்தைகளின் பெற்றோரின் முகவரியும், அக்குழந்தை தற்போது பெற்றோரிடம் உள்ளதா? அல்லது யாரிடம் உள்ளது? என்பன உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டன. ஆய்வு முடிவுற்ற பின், அதன் அறிக்கையை மாவட்ட சுகாதாரத்துறை சிபிசிஐடி காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில்,  நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை, 24 பெண் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள் விற்கப்பட்டு உள்ளது தெரிய வந்ததுள்ளது. மேலும், அந்த குழந்தைகளை வாங்கி வளர்த்து வரும் பெற்றோர்கள் மற்றும் இவர்களுக்கு இடையே தரகர்களாக செயல்பட்டோரையும் கண்டறிந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.