லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்துள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில், துவக்க வீரர்கள் இருவருமே சொதப்பினர்.
மார்கஸ் ஹேரிஸ் 13 ரன்களோடு ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். இந்தத் தொடரில் வார்னர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த போட்டியில் மாற்று வீரராக களமிறக்கப்பட்ட மேமுஸ் லபுஷானே, இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி 67 ரன்கள் அடித்தார். பின்னர் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மித் 60 ரன்கள் எடுத்த கையோடு களத்தில் இன்னும் நிற்கிறார். அவரோடு துணைக்கு நிற்பவர் டிராவிஸ் ஹெட். அவர் எடுத்திருக்கும் ரன்கள் 18.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளும், ஓவர்டன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். மழை காரணமாக 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
ஸ்மித் மீண்டும் நிலைத்து நின்று ஆடும்பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு சிரமம்தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.