சென்னை
நாளை தமிழகத்தில் வாக்கு எண்ணப்படுவதையொட்டி தமிழகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.
இந்தியப் பாராளுமன்றட்த்தின் 543 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இவற்றில் இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இவற்றில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.
இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவர்களை சீர் செய்வதற்காக சவுக்கு கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டு குடிநீர் வசதி மற்றும் நகரும் கழிப்பறை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2-வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3-வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஆயிரம் போலீசார் வீதம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.