ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறுவதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் விமானம் மூலம் ஒடிசா சென்றுள்ளனர்.

ஓடிசா மாநிலம் பல்சோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இந்த ரயிலின் B2 முதல் B9 வரை உள்ள பெட்டிகள் மற்றும், A1, A2 பெட்டிகள் என 10 பெட்டிகள் மொத்தமாக தடம்புரண்டு எதிர் தண்டவாளத்தில் கவிழ்ந்தது

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணையை ரயில்வே தொடங்கியுள்ளது.

இந்த இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் மூன்றாவது ரயிலாக அங்கு விபத்துக்குள்ளானது.

யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகளின் தடம் புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளாகி எதிர் பாதையில் விழுந்ததாக ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தில் இதுவரை 280 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலசோர் மருத்துவமனையில் ரத்த தானம் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் செய்வதற்காக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஏரளமான இளைஞர்கள் குவிந்துள்ளனர்.

https://twitter.com/dhananjaynews/status/1664827749184290816

சென்னைக்கு வரும் இவ்விரு ரயில்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வழக்கமாக நெறுக்கியடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழுவை ரயில்வே அமைச்சகம் அமைத்துள்ளது ரயில் சிக்னல் உள்ளிட்ட அனைத்தும் நவீன மயமாகி ஆன்லைன் ட்ராக்கிங் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்பும் இதுபோன்ற கோர விபத்துகள் நிகழ்வது சதிவேலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.