சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது, அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் வெளியிடப்பட்டது. இதில் அப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது அம்மாவட்ட காவல் ஆய்வாளராக இருந்த திருமலை, அத்துடன் சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
தொடர்ந்து, அப்போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. தலைமைச் செயலாளரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.