டில்லி
அதிக அளவில் கொரோனா தடுப்பூசியை வீணடித்த 3 மாநிலங்கள் விவரம் மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி இந்த பணி தொடங்கிய போது சுகாதாரப் பணியாளர்கள், முன் களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 45 வயதாகி இணை நோய் உள்ளவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய அரசு இதற்கான மருந்துகளை அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசி குறித்து மக்களவையில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இந்த பதிலில் நாட்டில் 62 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அதாவது கிட்டத்தட்ட 36 லட்சம் தடுப்பூசிகள் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வீணாகி உள்ளன.
இதில் அதிக அளவில் மத்தியப்பிரதேசத்தில் 16.48 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. அடுத்ததாக உபி மாநிலத்தில் 12.60 லட்சம் தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 6.86 லட்சம் தடுப்பூசிகளும் வீணாகி உள்ளன. மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அளவில் தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களின் பட்டியலில் அசாம், காஷ்மீர், ஆந்திரா, குஜராத், தமிழகம், திரிபுரா, மேற்கு வங்கம், கர்நாடகா இடம் பெற்றுள்ளன.