டில்லி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

பாஜக இரண்டாம் முறையாக அரசு அமைத்ததில் இருந்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.   அவ்வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது.

அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.  ஆயினும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து வருகிறது.  வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து குடியேறி உள்ள இந்துக்கள் இம்மாநிலங்களில் அதிக அளவில் உள்ளனர்.   அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதால் மாநிலத்தில் ஏற்கனவே உள்ளவர்களுக்குப் பின்னடைவு உண்டாகும் என்னும் அச்சத்தினால் இப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்த மசோதாவில் இஸ்லாமியர்களைத் தவிர மற்ற மதத்தவருக்கு குடியுரிமை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.   இந்த மசோதா மூலம் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் பல உரிமைகளை அரசு  பறிக்க நினைப்பதாக, காங்கிரஸ், திமுக, திருணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி உள்ன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசியல் அமைப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களைப் புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள இந்த  புதிய குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளார்.   ஏற்கனவே பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே திருணாமுல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என  தெரிவித்திருந்தார்.

“இந்த மசோதாவுக்கு மாநில மக்கள் யாரும்,  பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாங்கள் இங்கு இருக்கும் வரை யாரும் உங்கள் மீது எதையும் திணிக்க முடியாது”  என்று,  குடியுரிமை திருத்த மசோதாவுக்கு முதல் எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.