சென்னை: நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக எல்லைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பலியானோர் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை எட்டி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிகளவாக மகாராஷ்டிராவில் 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப் பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடப்படுவதாகவும் அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி, மருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் பரிசோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக குறைந்த அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றில் கூறி இருக்கிறது.