புதுச்சேரி,

வர்னரால் நியமனம் செய்யப்பட்ட 3 பாஜ எம்எல்ஏக்களுக்கும், மற்ற எம்எல்ஏக்கள் போல சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறி உள்ளார்.

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக 3 பாஜகவினரை கவர்னர் கிரண்பேடி நியமனம் செய்தார். பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது. அதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால், கவர்னரே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நியமன எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர்  மறுத்துவிட்டார். மேலும் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஏற்கவும் மறுக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அவர்கள் செயல்படவோ, அவர்களுக்கு ஊதியம் அளிக்கவோ உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை, எனவே அவர்களுக்கு எம்எல்ஏக்களுக் கான சலுகைகள் வழங்கபட வேண்டும்.   தலைமை செயலரின் உத்தரவுப்படி, 3 நியமன எம்எல்ஏக்களுக்கான சலுகைகள் வழங்கபட வேண்டும்  என்று ஆளுநர் கிரண்பேடி கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வழங்குவதைப்போல நியமன எம்எல்ஏக்களுக்கும் சலுகை வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.

அதில், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் ஊதியம், இதரச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.