கீழடி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் மேலும் 3 உரை கிணறுகள் ஒரே குழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இங்கு இதுவரை 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள், உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அகரத்தில் நடைபெறும் அகழாய்வில் ஒரே அகழாய்வு குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது 3 அடுக்கு கொண்ட ஒரு உரை கிணறும், 2 அடுக்கு கொண்ட இரு உரை கிணறும் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிணறுகளின் முழு வடிவத்தை வெளிக்கொணரும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு ஏற்கனவே 4 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.