சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட  சில இடங்களில்  வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

.ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதனால், ஈரான், கச்சா எண்ணை போக்குவரத்து பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு  செல்லும்  எண்ணெய் விநியோகம் மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள்  ஏற்பட்டுள்ளது. இது கடுமையான எரிசக்தி பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு உள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் போதிய அளவில் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் இருப்பு இருப்பதால் தற்போதைக்கு அதற்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குறிப்பாக செல்போனில் வாட்ஸ்-அப் எண்களில் அல்லது செயலிகளில் வணிகம் கியாஸ் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றை முன்பதிவு செய்தால் 25 நாட்களுக்கு பிறகு தான் சிலிண்டர்கள் கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள், ஓட்டல்கள் நடத்துவோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதையடுத்து, இயல்பு நிலை திரும்பும் வரை வணிக சிலிண்டர், சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று கியாஸ் நிறுவனங்கள் கூறி உள்ளன.

இதனால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் செயல்படாது என்று அதாவது ஓட்டல்கள் வேலைநிறுத்தம் தொடங்குவதாக பெங்களூரு மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. வளைகுடா போரால் உலக அளவில் கியாஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருகிறோம். மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்தி கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில்,  தமிழ்நாட்டில் 3 மாதங்களுக்கு தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடையின்றி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்றும், தமிழ்நாட்டில்,  தங்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]