பெங்களூரு:  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத் தளத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என கூறி,  100-க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையத்தை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள்  காவல்நிலையம் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தி உள்ளனர்.  மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது. அங்கிருந்த சுமார் 10 வாகனங்கள் மட்டுமின்றி வீட்டிற்கும் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

திடீரென கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு, தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதையடுத்து  கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரக்காரர்கள் தாக்கியதில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சர்ச்சைக்கு காரணமாக இருந்த நவீன் கைதுசெய்யப்பட்டார்.  கலவரத்தில் ஈடுபட்ட தாக 110 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, உள்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.