பாலக்காடு : அம்ரிதா எக்ஸ்பிரஸ் உள்பட 3 கேரள மாநில ரயில் சேவைகளை தமிழகத்திற்குள் நீட்டிப்பு செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.
அண்மையில், ரயில்வே கால அட்டவணை குழு கூட்டம், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடந்தது. இதில் பல்வேறு ரயில் சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில், கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் இயங்கும் சில ரயில்களின் சேவையை நீட்டிக்க தீர்மானம் செய்யப்பட்டது.
அதன்படி, குருவாயூர் – புனலுார் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (06328), திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (16343), பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் (16792) ஆகிய ரயில்களின் சேவையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரிகள்,
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரை செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
குருவாயூர் – புனலுார் வழித்தடத்தில் இயங்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை வரை நீட்டிக்கப்படுகிறது
பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், துாத்துக்குடி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு, கால அட்டவணையுடன் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறினார்.