தமிழகத்தில் இந்து அமைப்பினரின் ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தணியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில், அரசுக்கு எதிராக நேற்று சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று திமுகவின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, தமிமுன் அன்சாரி அவர்களுடன் இணைந்து சபையின் நடுவில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் அவையில் இருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவ தாக மும்மூர்த்திகளான 3 எம்எல்ஏக்களும் அரசை மிரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சி நடத்திய கருணாஸ், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபோல, கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தணியரசும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ‘தமிமுன் அன்சாரி அந்த கட்சியில் இருந்து பிரிந்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த 3 பேரும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இவர்களும் அதிமுக உறுப்பினர்களாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜெ. மறைவை தொடர்ந்து, அமைதியாக இருந்து வந்த இந்த 3 எம்எல்ஏக்களும் தனி ஆவர்த்தனம் செய்ய தொடங்கினர். அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், ஜெ. மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டு வந்த நிலையில்,
அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து தனி அணியாக செயல்பட தொடங்கினர். அந்த நேரத்தில், இந்த 3 எம்எல்ஏக்களும் திடீரென தலைமறைவாகினர்.
இதுபோன்ற சூழலில் எடப்பாடி அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த காரணத்தால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக கொறடாவின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில், ஆட்சி நீடிக்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் முக்கியம்.
இதுபோன்ற சூழ்நிலையில், அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அன்சாரி, தணியரசு ஆகியோர் தங்களது ஆதரவை வாபஸ் பெறப்போவதாக எடப்பாடி தலைமையிலான அரசை மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது, எதிர்க்கட்சியினர்களுக்கு ஆதரவாக விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் வர தடை விதிக்க வேண்டும் என கருணாஸ், தமிமுன் அன்சாரி, தணியரசு ஆகியோர் கோரிக்கை விடுத்த நிலையில், அதை அரசு ஏற்காத சூழலில் மீண்டும் ஆட்சியை கவிழ்க்கப்போவதாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது எடப்பாடி தலைமையிலான அரசுக்கு 113 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒருசிலர் டிடிவி தினகரனுக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதுபோன்ற இக்கட்டமான சூழலில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோரி வருகிறார்.
இத்தகைய இக்கட்டான அதிமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தணியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்களது ஆதரவை விலக்கிகொள்ளப் போவதாக அரசை மிரட்டி வருவது தமிழகத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தமும்மூர்த்தி எம்எல்ஏக்கள் மிரட்டல் ஆதாயத்துக்கான மிரட்டலா அல்லது அதிமுக அரசுக்கு எதிரான மிரட்டலா என்பது போகப் போகத் தெரிய வரும்.