சென்னை: வடசென்னையின் மொத்த பகுதியும் 17ந்தேதி நள்ளிரவு சுமார் 12மணி முதல் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் துங்க முடியாமல் பெரும்பாலோர், மீண்டும் வெட்டு ஏற்படுமோ என அச்சத்தில் பொதுமக்கள் சாலைகளில் அமர்ந்து நள்ளிரவு நேரத்தை கழித்து வந்தனர். இந்த நிகழ்வு சென்னை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், திமுக அரசுதான் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வகையில், வடசென்னையில், மின்சாரத்தை துண்டித்து உள்ளதாக, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார் அளித்துள்ளது. சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூவிடம் த வட சென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜ், பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முறை போலவே இப்போதும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். திமுக கூட்டணி தோற்கப்போகிறது என்ற அச்சத்தில், ஆட்சி அதிகாரம், பண பலம், அடியாள் பலம் அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பணப் பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில்தான் அதிகளவு பணப் பட்டுவாடா நடந்து வருகிறது. எங்கெல்லாம் பணப் பட்டுவாடா நடக்கிறதோ அங்கெல்லாம் மின்சாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுப் போட பணம்கொடுத்து வருகிறார்கள். பணம் கொடுக்கும் திமுகவினருக்கு காவல் துறையினரும் உடந்தை.
பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள், பணத்துக்காக வாக்களிப்பவர்கள் அல்ல, அவர்கள் நாட்டுக்காக, தேசியத்துக்காக வாக்களிக்கக் கூடியவர்கள். இதுதிமுகவினருக்கு நன்கு தெரியும். எனவே, வாக்குப்பதிவு நாளன்று அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க பல்வேறு அராஜகங்களை கட்டவிழ்த்து விட வாய்ப்புள்ளது. எனவே, வடசென்னை மக்களவைத் தொகுதியில் குறிப்பாக கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை ராணுவப்படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.