டில்லி
வங்கிகள் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது 3% ஜி எஸ் டி வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசின் கலால் மற்றும் சுங்கத்துறையிடம் தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் ஜி எஸ் டி பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கம் வாங்கும் போது தங்கத்தின் விலை, மற்றும் செய்கூலியையும் சேர்ந்து கணக்கிடப்பட்டு ஜி எஸ் டி வசூலிக்கப்படும். தனியாக செய்கூலி குறிப்பிட்டிருப்பினும் மொத்த மதிப்புக்கு செய்கூலியும் சேர்த்தே கணக்கிடப்படும்.
வங்கிகள், மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கம் இறக்குமதி செய்யும் போது சுங்க வரி அல்லாமல் தனியாக 3% ஜி எஸ் டி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தப் படும் ஜி எஸ் டியை ஆண்டு முடிவில் டேக்ஸ் கிரெடிட் ஆக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இது வங்கிகளுக்கும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்பு சுங்க வரியுடன் மறைமுக வரியாக 12.5% வசூலிக்கப் பட்டு வந்தது. ஆனால் தற்போது சுங்க வரியுடன் 3% ஜி எஸ் டி மட்டும் செலுத்தினால் போதுமானது
இவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.