கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்புணர்வு செய்து வந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்டட மாணவி உடல்நிலை சரியில்லை என பள்ளி வராமல் இருந்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில், இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாக்கியது. இந்த நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவிக்கே இந்த அவலம் நடந்தேறியுள்ளது.

மாதா, மாதா, குரு என்ற அந்தஸ்தஸ்தில் உள்ள ஆசிரியர்களே, தன்னிடம் படிக்க வந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி. இவர் கடந்த ஒரு மாதம் காலமாக பள்ளிக்கு வரவில்லை. உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர், மாணவியின் வீட்டுக்கு சென்று, மாணவியை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை என விசாரித்துள்ளார்.
அப்போது சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார்.
இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு, பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம் என்றும், மூன்று பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் உடனே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க, மாணவியின் தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி (57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் (45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் உறுதியானது.
இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசுப் பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…