புதுச்சேரி: புதுச்சேரியில் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகளை வழங்க துணைநிலை பொறுப்பு ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

துணைநிலை பொறுப்பு ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகவில்லை. புதுச்சேரியில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து கூடிய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் பெரும்பான்மை இல்லாததால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

இந் நிலையில் புதுச்சேரியில் அனைத்து அரசு அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். 3 முட்டை தருவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 29,846 குழந்தைகளுக்கு இனி மூன்று முட்டைகள் வழங்கப்பட உள்ளது.இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1.18 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.