புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழாவுக்கு செல்ல முயன்ற திமுக எம்எல்ஏக்கள் 3 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கட்டிடத் திறப்பு விழா இன்று 12 மணி அளவில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள அந்த பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பின் பேரில் கலந்துகொள்ள சென்றபோது, திடீரென அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அரசு விழாவில் நுழைய முற்பட்ட 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை-பெரியண்ணன் அரசு, திருமயம்-ரகுபதி, ஆலங்குடி-மெய்யநாதன் உள்பட 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.