ஸ்ரீநகர்
நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவால் மூவர் உயிர் இழந்துள்ளனர்.
நேற்று முன் தினம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளில் இணைக்கும் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்பான் – பனிகல் இடையே பல இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களை சோபியான் மாவட்டத்தை இணைக்கும் முகால் சாலையிலும் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தவிர ரம்பன், தோடா, கிஸ்த்வார், ரஜோரி மற்றும் ரியாஸ் மாவட்டங்களில் நிலச்சரிவுடன் அதிக அளவில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஆப்பிள் தோட்டங்கள் அதிகம் உள்ளன. அங்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 3 பேர் உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.