பெங்களூரு: கர்நாடக அரசில் 3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்கி, பிரித்து அளிக்குமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், முதல்வர் எடியூரப்பா அதிர்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பா முதல்வராக பதவியேற்று, நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனாலும், அவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது.
தற்போது, தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால், 20க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இலாகா ஒதுக்கீடு மற்றும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய சிக்கல்களையே எவ்வாறு களைவது என்று விழிபிதுங்கி நிற்கும் எடியூரப்பாவிற்கு, தற்போது 3 துணைமுதல்வர் பதவிகள் என்பது மற்றொரு பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
துறைகள் ஒதுக்கீடு தொடர்பான சிக்கலால் டெல்லி சென்ற எடியூரப்பாவால் அமித்ஷாவை சந்திக்க முடியவில்லை. எடியூரப்பாவிற்கு பெரியளவில் செக் வைக்கவே, 3 துணை முதல்வர் பதவிகளை உருவாக்குமாறு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் நிர்ப்பந்தம் செய்ததாலேயே இந்த உத்தரவு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த துணை முதல்வர் பதவிகள் ஜாதி கோட்டா அடிப்படையில் நிரப்பப்பட வேண்டுமாம். ‘குருபர்’ இன கோட்டாவில் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கும், ‘தலித்’ கோட்டாவில் அமைச்சர் கோவிந்த கோர்ஜோலுக்கும், ‘ஒக்கலிகர்’ கோட்டாவில் அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கும் துணை முதல்வர் பதவிகளை அளிக்குமாறு உத்தரவு வந்துள்ளதாம்.
ஆனால், துணை முதல்வர் பதவிகளை உருவாக்கக்கூடாது என்றும், அதனால் பல மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியளவில் அதிருப்தி அடைவார்கள் என்றும் எடியூரப்பாவிற்கு வேறு தரப்பிலிருந்து நெருக்கடி வந்துள்ளதாம்.