சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில்,  வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 1270  சிறப்பு பேருந்துகளையும் இயக்குவதாக அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு, சென்னை உள்பட நகர்புறங்களில் இருந்து, வார விடுமுறை மற்றும் விசேஷ தினங்கள், பண்டிகைகளின் போது தினசரி இயக்கப்பட்டு வரும் விரைவு பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இந்த வாரம் புனித வெள்ளி விடுமுறை நாளுடன் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்கா சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி,  சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வரும் 28 (வியாழன்) அன்று 505 பேருந்துகளும், 29 (வெள்ளி) அன்று 300 பேருந்துகளும், 30 (சனிக்கிழமை)  அன்று 345 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.

அதுபோல அன்றைய தினங்களில்  கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.