டெல்லி: 18வது மக்களவைக்கான, 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன் உள்பட பலர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா,. காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை முதலே விறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவின் 20 தொகுதிகள், கர்நாடகா 14 தொகுதிகள், ராஜஸ்தான் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை இந்தியா கூட்டணி சார்பில் ஆனி ராஜாவும், பாஜக சார்பில் மாநில தலைவர் சுரேந்திரனும் களமிறங்கி உள்ளனர். இதனால் பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நேரடியாக களம் காண்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில், இரண்டு முறை எம்.பி.யும், மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான அருண்கோவில் – உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நிலையில், மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இன்றைய தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு. இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளதாகவும், சிசிடிவி காமிரா மூலம் கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன், கன்னூரில் உள்ள 161 வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த வந்தார். திருச்சூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை பதிவு செய்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆலப்புழாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர், தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே வரிசையில் நின்று வாக்களித்தார்.
அதுபோல கர்நாடக மாநிலத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கினை பதிவு செய்தார். நிர்மலா சிதாராமன், அவரது உறவினருடன் பெங்களூரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
கர்நாடகாவின் பெங்களூருவில் தனது வாக்கைப் பதிவு செய்த ராகுல் டிராவிட், “அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். இது ஜனநாயகத்தில் நமக்குக் கிடைத்த வாய்ப்பு” என்று கூறினார்.
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த முன்னாள் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தனது மை விரலைக் காட்டினார்.
ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜோத்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு மை தடவிய விரல்களைக் காட்டியுள்ளனர். இவரது மகன் வைபவ் கெலாட் ஜலோர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ராஜஸ்தான் கோட்டா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஓம் பிர்லா தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியளார்களிடம் கூறுகையில், “இது அரசியல் சாசனத்தை காப்பாற்றும் போராட்டம் அல்ல, அரசியல் சட்டம் கைவசம் உள்ளது. வெறும் பொய்களை பரப்புகின்றனர். சமூக கட்டமைப்பும், சமூக இடஒதுக்கீடும் அப்படியே இருக்கும்… விமான நிலையம் கண்டிப்பாக அமையும். மாநில அரசு ஒன்பது மாதங்களாக நிலுவைத் தொகையை செலுத்தவில்லை, ஆனால் பஜன்லால் ஷர்மா முதல்வராக பதவியேற்றவுடன், ராஜஸ்தான் அரசு 20 நாட்களுக்குள் விமான நிலைய கட்டுமானத்தை தொடங்கும் என்றார்.