நெல்லை: 2வது படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தென்காசி பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கிளை நிர்வாகியும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15 வது வார்டு உறுப்பினரான வீராசாமி (வயது 47) என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி, அந்த அப்பாவி சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் சில்மிஷம் மற்றும் சேட்டை செய்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
வீராசாமியின் நடத்தையால் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது பெற்றோர்களிடையே சிறுமி தெரிவிக்க, அவர்களும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த சிறுமிக்கு எடுக்கப்பட்ட சோதனையில், வீராசாமி அந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்தது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர் தெரிவிக்கவே, அவர்கள் குழந்தையிடம் விவரங்களை கேட்டுள்ளனர். அப்போது, வீராசாமி மிரட்டியது தெரிய வந்ததுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், குற்றாலம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதுகுறித்து அறிந்தும், விசிக நிர்வாகியான வீராசாமி தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் வேறுறொரு பகுதியில் உள்ள வயல்காட்டில் மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி என பாராமல், அந்த பகுதி கவுன்சிலரும் கட்சி நிர்வாகியுமான ஒருவர் தகாத செயலில் ஈடுபட்ட அநாகரிக செயல் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கவுன்சிலர் பதவியை விட்டு விரட்ட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.