டெல்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 25ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைமயிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது, கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது,  2ஜி ஸ்பெக்டரம் உரிமம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன் காரணமாக  ரூ.1.76 லட்சம் கோடிக்கு முறைகேடு நடைபெற்றது என  சிபிஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ராஜா,  கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் வழக்குகளை  நீதிபதி ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ, கடந்த 2011ம் ஆண்டு தாக்கல் செய்தது. அதையடுத்து நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் 25ந்தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்ற நீதிப ஓ.பி.சைனி கூறியிருந்தார்.

இந்நிலையில் நாளை இந்த பரபரப்பான வழக்கு தீர்ப்பு குறித்து தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.