சென்னை,

போக்குவரத்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு எற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகை, வருங்கால வைப்புநிதி நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள்  கடந்த 15ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்தன.

இரண்டு நாள் நீடித்த இந்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் இரண்டு நாளில் அரசுக்கு ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி மற்றும் தொ.மு.ச. மாநில பொதுச் செயலர் எம்.சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்பட்டு பேருந்து ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 மண்டலங்களில் 22 ஆயிரம் பேருந்துகளும் 1,650 விரைவுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரத்தில் மட்டும் 3,300 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இரண்டு நாள்  வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.20 கோடி வீதம் இரு நாள்களில் மொத்தம் ரூ.40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.