பொற்கோ
பொற்கோ

துவரம் பருப்பு விலை கிலோ 200 ரூபாயை தொட்டிருக்கிறது. ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாத பொருளாகிவிட்டது. ஆகவே துவரம் பருப்பு இல்லாமல் செய்யும் சில சுவையான உணவு வகைகளைச் சொல்கிறார்  தொல்காப்பியன் பொற்கோ

கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் – இரண்டு, பிஞ்சுக் கத்தரிக்காய் – 1/4 கிலோ, முருங்கைக்காய் – இரண்டு, தக்காளிப்பழம் – இரண்டு, உப்பு – தேவையான அளவு, தனியா, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு – தலா ஒரு டீ ஸ்பூன் (வறுத்து பொடித்து) மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – சிறிதளவு, தேங்காய்ப்பால் – ஒரு கப்.

செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த பொடி, சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். கிரேவி கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றி கீழே இறக்கவும்.

சூடான சாதத்தில் இந்தப் பொரியல் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

தொட்டுக் கொள்ள ஏதும் தேவை இல்லை

வாழைத்தண்டு மோர்கூட்டு

தேவையான பொருட்கள்:- வாழைத்தண்டு – ஒரு சிறிய துண்டு, தயிர் – 100 மில்லி, பச்சைமிளகாய் – இரண்டு, தேங்காய்த்துருவல் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு,

தாளிக்க: பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு- தலா 1/4 ஸ்பூன்.

செய்முறை:- வாழைத்தண்டை சிறுவில்லைகளாக நறுக்கி நார் எடுத்து உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து தயிருடன் சேர்க்கவும். இதை வேகவைத்த வாழைத்தண்டுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து இதை ரெடியாக உள்ள கலவையில் நன்கு கலந்து இறக்கவும்.

சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த மோர்க்கூட்டை போட்டுப் பிசைந்து பப்படம் பொரித்து சாப்பிட சிறந்த காம்பினேஷன்.

 

t2

 

கீரை புரோட்டீன் கூட்டு

தேவையான பொருட்கள்:– முளைகட்டிய பாசிப்பயிறு – ஒரு கிண்ணம், முருங்கைக்கீரை – ஒரு கிண்ணம், தேங்காய்த்துருவல் – 1/4 கிண்ணம், இஞ்சி – ஒரு துண்டு, மிளகாய் வற்றல் – ஒன்று, உப்பு – தேவையான அளவு, சீரகம், மிளகு, தலா – 1/2 ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன்.

செய்முறை:- முளைகட்டிய பாசிப்பயறையும் முருங்கைக் கீரையும் ஒன்றாக வேகவிடவும். வெந்த உடன் தேவையான உப்பு சேர்க்கவும். தேங்காய்த்துருவல், மிளகு, சீரகத்தை மிளகாய்வற்றல் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வேக வைத்த கீரையுடன் சேர்த்துக் கொதிக்க விட்டு கடுகு தாளித்து இறக்கவும்.

மைசூர் பருப்பு சேர்த்தும் செய்யலாம். பிடித்தமான காய்கள் சேர்த்தும் செய்யலாம். கீரையுடன், சூடான சாதத்துடன் இந்த கூட்டு சேர்த்து சாப்பிட
மிகவும் நன்றாக இருக்கும். சிப்ஸ் சிறந்த காம்பினேஷன்.