திருச்சூர்
முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருச்சூர் அருகில் புதுமனச்சேரி என்னும் இடத்தில் தனியார்ப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அப்துல் ரஃபீக் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் பள்ளி மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் சென்றார். சுற்றுலா முடிந்து திரும்பி வரும் போது பேருந்தில் முதல் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தாள்
அந்த சிறுமிக்கு அப்துல் ரஃபீக் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்துல் ரஃபீக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருச்சூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில் சிறுமிக்கு அப்துல் ரஃபீக் பாலியல் தொந்தரவு தந்தது சாட்சியங்கள் மற்றும் அறிவியல் ஆதாரம் மூலம் நிரூபிக்கப்பட்டது.
எனவே நீதிமன்றம் அப்துல் ரஃபீக்குக்கு 29 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அப்துல் ரஃபீக் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.