தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோருக்கு தொறு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 29 பேருக்கு உறுதியாகி உள்ளது. தொற்று பாதிப்பு 143 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாவட்ட மக்களிடையே மீண்டும் கொரோனா அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் மெத்தனம், அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டம் போன்றவை காரணமாக தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தஞ்சை மாவடடம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 8-ந் தேதி ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் 1,078 மாணவிகளுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 58 மாணவி ஒரு ஆசிரியை உள்பட 59 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மாணாக்கர்களின் பெற்றோருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில், 9 பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கக்கூடிய 117 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனால் மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை தனியார் பள்ளியில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இன்று மேலும் 15 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், இதுவரை 143 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 58 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.