டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவில் முதல்கட்டமாக 30கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அந்த தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் 28ஆயிரம் குளிர்பதன கிடங்குகளை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

உலகநாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் இந்தியா உள்பட உலக நாடுகள் தீவிரம் காட்டி வருக்ன்றன. பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரித்து இறுதிக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. இதையடுத்து ஜனவரியில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவில் முதல்கட்டகமாக  30கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து,  மாநிலங்கள், மாவட்டங்கள் மூலமாக பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில்,  இந்த 30 கோடி பேர், 4 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதன்படி, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்க,ள  சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர், மாநகராட்சி பணியாளர்கள், போலீசார், ஆயுதப்படையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 2 கோடி பேர், 50 வயதுக்கு மேற்பட்ட 26 கோடி பேர், இதர நோய்களைக் கொண்ட 50 வயதுக்கு குறைவான 1 கோடி பேர் என மொத்தம் 30 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பட்டியலை இம்மாதத்துக்குள் இறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசுகேட்டுக்கொண்டுள்ளது.

அதுபோல  கொரோனா தடுப்பூசி, ஆஸ்பத்திரிகள், சுகாதார மையங்களில் போடப்படும். அதுமட்டுமின்றி, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து கட்டிடங்கள் மற்றும் மாநில அரசுகள் தேர்வு செய்யும் இதுபோன்ற பிற இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  மத்திய அரசின் ‘இவின்’ என்ற மின்னணு தளம் மூலம் சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தடுப்பூசி போட வேண்டிய இடம், நாள், நேரம் ஆகிய விவரங்கள் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். போலிகளை தடுக்க அவர்களின் ஆதார் எண் இணைக்கப்படும். ஆதார் எண் இல்லாவிட்டால், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எண் இணைக்கப்படும் என்றும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.  அத்துடன்,  கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்கும் ‘க்யூஆர் கோடு’ உருவாக்கப்பட்டு, அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், வாங்கப்பட உள்ள 30கோடி  கொரோனா தடுப்பூசிகளை  எங்கே சேமித்து வைப்பது என்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி,  கொரோனா தடுப்பூசி  குறைவான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் என்பதால், அவை எங்கெல்லாம் சேமித்து வைக்க முடியும், அதற்கான வசதிகள் அரசிடம் உள்ளதா என்பதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,  தற்போதைய நிலையில், நாடு முழுவதுழம் அரசிடம் 28 ஆயிரம் குளிர்பதன கிடங்குகள், அவைகள் கொரோனா தடுப்பூசி சேமித்து வைக்க பயன்படுத்த முடியுமா, இட வசதிகள் போதுமானதாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  முதல்கட்டமாக அரசிடம் உள்ள சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தலாம் என்றும, தேவைக்கேற்ப  தனியாரிடம் உள்ள குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கான பணிகளை தேசிய நிபுணர் குழு முன்னெடுத்து வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.